குறட்டை

 #குரட்டையைவிரட்ட_ஒரு_எச்சரிக்கைப்பதிவு.


சத்தமான குறட்டைச் சத்தம், ஆரோக்கியக் குறியீடு அல்ல. உடல் எடை அதிகமாக இருந்து, தொப்பையுடன் வலம்வருபவர் வாயில் இருந்து வரும் இந்த ஒலி, பல வேளைகளில் அபாயச் சங்கு ஒலி.


சில விநாடிகள் இடையிடையே மூச்சு நின்று, தடங்கலுடன் நடைபெறும் சுவாசத்தின்போதும், அனிச்சையாக வாயால் கொஞ்சம் காற்றை ஆற்றலுடன் உள்ளிழுக்கும்போதும் எழுவதுதான் இந்த விபரீதக் குறட்டைச் சத்தம். 


இப்படி ஒவ்வொரு முறையும் சில விநாடிகள் மூச்சுத் தடங்கல் நிகழும்போதும் தடாலடியாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும். பின் சத்தமான உள்ளிழுப்பில் அந்த இழப்பு ஈடுகட்டப்படும். 


இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு காரணமாக, ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், மேலெழுந்தவாரியான உறக்கமே நிகழும். இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், குறட்டையுடன் அவதிப்படும் நோயை `Sleep Apnea’ என்கிறார்கள். 


குறட்டைவிடுபவர்களுக்கு இதயத் துடிப்பில் தள்ளாட்டம், இதயத் தசைகள் வலுக்குறைவது, மாரடைப்பு… எனப் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லையென்றால், உயிருக்கேகூட உலைவைத்துவிடும் குறட்டை. 


பெரும் தொப்பைக்காரர்களுக்கு அதிகக் குறட்டை இருக்கும். ஆஸ்துமா நோயாளிகள், சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கும் குறட்டை வரும். குறட்டைக்கும் மதுவுக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு.


 குடிப் பழக்கம் உள்ளவருக்கு வரும் குறட்டை, காலன் கொடுக்கும் அபாய அலாரம். இரவில் மது அருந்தி, நடு இரவில் அதிகக் கொழுப்பு, காரம் உள்ள உணவைச் சாப்பிட்டு உறங்கும் பலருக்கும் கண்டிப்பாகக் குறட்டை இருக்கும். 


அது ஆழ்நிலைத் தூக்கத்தைப் பாதிப்பதால், பகலில் மனம் ஒட்டாத அலுவலகக் கூட்டத்தில் சில மணித் துளிகள் அமர்ந்திருந்தாலே தூக்கம் கண்களைச் சுழற்றும். சில நிமிடங்களாவது பகல் உறக்கம் கிடைக்காவிட்டால், மாலைப் பணியில் எரிச்சல் எட்டிப் பார்க்கும். 


குறட்டையைப் போக்க சில வழிகள்… 


*குறட்டையில் இருந்து விடுபட, குடியில் இருந்து விடுபட வேண்டும். உடல் எடையைக் (குறிப்பாக தொப்பையை) குறைத்தே ஆக வேண்டும். 


* சித்த மருத்துவம், குறட்டைப் பழத் தைலத்தை மூக்கடைப்பு நோய்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது. சைனஸ் மூக்கடைப்பு உள்ளவர்கள், சுக்குத் தைலம் அல்லது குறட்டைப் பழத் தைலத்தால் வாரம் ஒருமுறையாவது எண்ணெய்க் குளியல், மற்றவர்கள் நல்லெண்ணெய்க் குளியல் போடுவது படிப்படியாக ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். 


* தினமும் `கபாலபாதி’ எனும் நாடி சுத்தி மூச்சுப் பயிற்சியும், பிற பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்வதுதான் குறட்டையை அடியோடு நீக்கச் சிறந்த வழிகள். 


* உறக்கத்துக்கு எனத் தனி மூச்சுப் பயிற்சியை வடிவமைத்துள்ளனர். `Rapid eye movement sleep’ எனும் மேலோட்டமான தூக்கம் எப்படிக் கட்டுப்பட்டு, ஆழ்ந்த உறக்கம் வரவழைக்கப்படுகிறது என்பதை, `Electro Encephalogram’ சோதனை மூலம் நிரூபிக்கவும் செய்திருக்கிறார்கள். 


* காலையில் 45 நிமிட வேக நடைப்பயிற்சி, மாலையில் மூச்சுப் பயிற்சி, உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பழக்கம், மதுவை ஒழித்தல் இவை மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தருபவை. 


* குழந்தைகளுக்கு அடினாய்டு, டான்சிலைடிஸ் பிரச்னைகள் இருந்தால், அதனால் ஏற்படும் தொண்டைச் சதையின் மூச்சு இறுக்கத்தாலும், நெஞ்சில் சளி கட்டுவதால் ஏற்படும் அவதியாலும்கூட குறட்டை உண்டாகும்.


 அவர்களுக்கு டான்சிலைடிஸ் பிரச்னை இருக்கிறதா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கற்பூரவல்லி இலைச் சாறில் தேனைச் சேர்த்துக் குழைத்துக் கொடுத்தால், மெள்ள மெள்ள டான்சில் வீக்கம் குறையும். அதேபோல், மிளகை தேனில் குழைத்துத் தந்தால், சைனஸ், டான்சிலைடிஸ், நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை நீக்க உதவும். 


பூண்டுத் தேனைப் பக்குவமாக குழந்தையின் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சிலின் மீது தடவினாலோ, நாக்கின் பின்புறம் தடவி கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கச் சொன்னாலோ, மெதுவாக வீக்கம் குறையும். 


குறட்டைப் பழத்தைலம் எப்படிச் செய்வது? 


நாட்டு-சித்த மருத்துவக் கடைகளில் `குறட்டைப் பழம்’ கிடைக்கும். குறட்டைப் பழச் சாறு 1 லிட்டர், அதோடு சம பங்கு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு, அதோடு 20 கிராம் இடித்த மிளகு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். சாறு வற்றி, எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். வாரம் ஒருமுறை இதைத் தேய்த்து எண்ணெய்க் குளியல் போடலாம். 


ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியமான ஆயுளுக்கு ரீசார்ஜ்! எனவே, குறட்டையை விரட்டுவோம்!

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி