குருநானக்
மகான்களின் வாழ்க்கை வரலாறு
மகான் குருநானக்
-
இந்து-முஸ்லிம் பேதம் பாராட்டாது வாழ்ந்த மாபெரும் சித்தர் தான் குருநானக். மேற்கு பாகிஸ்தானில் உள்ள தால்வண்டி கிராமம் தான் இவர் அவதரித்த சிற்றூர். ஒரு கார்த்திகை மாத பவுர்ணமி அன்று, மேதாகலூரா என்ற எளிய மனிதருக்கும் அவரது மனைவி மட்டாதிரிபாத் என்ற பெண்மணிக்கு இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார். அவதார புருஷரான அவருக்கு உலகியல் படிப்பில் நாட்டம் தோன்றவில்லை. நானக்கின் தந்தை அவரை மாடுமேய்க்க அனுப்பினார். நானக் மகிழ்ச்சியோடு மாடுமேய்த்தார். மாடுகளை ஓட்டிச் சென்று மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு, நாள்தோறும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பல மணிநேரம் நானக் தியானம் பழகலானார். மாடுகள் சமர்த்துப் பசுக்கள். கொஞ்சகாலம் நன்றாகத்தான் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்கு மெல்ல மெல்ல திருட்டுப் புத்தி வந்தது. கண்டிப்பார் யாருமில்லை. மேய்க்க வந்த சிறுவனோ மரத்தடியில் கண்மூடி உட்கார்ந்திருக்கிறான். இனி என்ன? மாடுகள் கூட்டம் கூட்டமாக அடுத்தவர் வயல்களை மேயலாயின. அதனால் பெருமளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் பஞ்சாயத்தைக் கூட்டினார். என்ன அக்கிரமம் இது! மாடுகளை என் வயலில் மேய விட்டுவிட்டு இந்த பையன் கண்ணை மூடி உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்கிறான். கேட்பாரில்லையா இதை? நானக்கின் தந்தைக்குத் தலைகுனிவு ஏற்பட்டது. என்ன அபராதம் சொல்லுங்கள், கட்டிவிடுகிறேன் என்றார் அப்பா. நானக், அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்றான். உங்கள் வயல் நல்ல விளைச்சல் கண்டிருக்கும்; கவலைப்படாதீர்கள் என்று பாதிக்கப்பட்டவரிடம் சொன்னான். விளைச்சலைத்தான் மாடு மேய்ந்துவிட்டதே என்றார் அவர். இல்லையில்லை எனக்குத் தெரியும் உங்கள் வயல் நல்ல விளைச்சல் கண்டிருக்கும். திரும்பத் திரும்ப நானக் இதையே சொன்னதும், பஞ்சாயத்தில் இருந்த அனைவரும் சலிப்போடு எழுந்து, எவ்வளவு தூரம் பாதிப்பு என்றறிய வயலை நோக்கிச் சென்றார்கள். வயலின் சொந்தக்காரருக்கு அங்கு கண்ட காட்சியால் மயக்கம் வரும்போல் இருந்தது. சற்றுமுன் தாறுமாறாக இருந்த பயிர்களெல்லாம் இப்போது தளதள வென்று வளர்ந்து-அந்தக் காலமில்லாத காலத்தில் அறுவடை செய்யுமளவு கதிர் விட்டிருந்தன! பஞ்சாயத்தார் அனைவரும் வியந்து நின்றனர். இது சிறுவானயிருந்தபோதே சித்தர் நானக் தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய முதல் சித்து. இவன் அற்புதக் குழந்தை என்று நானக்கின் காலில் விழுந்து பணிந்தார் அந்த வயலின் உரிமையாளர்.
ஒருநாள் மதியம் வழக்கம்போல் மாடுகள் தம்போக்கில் மேய்ந்துகொண்டிருந்தன. சிறுவன் நானக் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். சூரிய கிரணங்கள் உச்சி மண்டையைப் பிளந்துகொண்டிருந்தன. ஒரு வழிப்போக்கர் வெயிலில் நடக்க முடியாமல் நடந்து வந்தார். தற்செயலாக நானக்கைப் பார்த்தார். என்ன அதிசயம்? ஓர் இளம் முனிவர்போல் நானக் தவத்தில் ஆழ்ந்திருக்க அவர்மேல் வெய்யில் படலாகாது என்று ஒரு பாம்பு அவர் தலைக்கு மேலாகக் குடைப்போல் படம் விரித்துப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. ஓடோடிச் சென்று ஊருக்குள் அவர் தகவல் சொல்ல, பலரும் வந்து பார்த்து வியப்படைந்தார்கள். கதிரவன் மலை வாயில் விழத் தொடங்கினான். நானக் தவம் கலைந்தார். பாம்பு ஒன்றுமே நிகழாததுபோல் ஊர்ந்து மறைந்தது. மக்கள் பிரமிப்புடன் நானக்கை நமஸ்கரித்தார்கள். பெற்றவர்களைத் தவிர நானக் அற்புதப் பிறவி என்பதை எல்லோரும் மெல்ல மெல்லப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். நானக்கிற்கு திருமண ஏற்பாடுகள் விறுவிறுவென நடைபெற்றன. பித்துப் பிடித்தாற்போல் நீண்ட நேரம் தியானத்தில் உட்காரும் அவரை, சற்றுப் பித்தேறியவர் என்றே குடும்பத்தினர் நினைக்கத் தொடங்கியிருந்தனர். திருமணம் செய்துவைத்தால்தான் இந்தப் பித்து தெளியும் எனக் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.
வேலை ஏதுமில்லாவிட்டால் யார் பெண் கொடுப்பார்கள்? நானக் அக்கா கணவர் அப்போது அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரிடம் நானக்கின் சகோதரி வற்புறுத்த, அவரது பரிந்துரையால் நானக்கிற்கு ஓர் அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. அரசாங்க வேலையில் அவர் சேர்ந்ததை அறிந்து நானக்கிற்கு பெண் கொடுக்க நான் நீ என்று பலர் முன்வந்தார்கள். மட்டாகலாகனி என்ற பெண் நானக்கிற்குப் பொருத்தமானவளாக குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவளே அவருக்கு மனைவியானாள். திருமண வாழ்விற்காகத் தான் பிறக்கவில்லை என்று நானக் எவ்வளவோ மறுத்துக் கூறியும், கடும் வற்புறுத்தல்கள் காரணமாக அவர் சம்மதிக்க வைக்கப்பட்டார். காலப் போக்கில் நானக்கிற்கு ஸ்ரீசந்த், லட்சுமிசந்த் என்று இரண்டு குழந்கைளும் பிறந்தன. ஆனால் அவ்வப்போது நெடுநேரம் தியானத்தில் ஆழ்ந்துவிடும் பழக்கம் மட்டும் நானக்கிடம் தொடர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று நாடெங்கும் பஞ்சம் தோன்றியது. மக்கள் பசியால் பெரிதும் கஷ்டப்படத் தொடங்கினர். எங்கும் வறுமையின் ஓலம். கவர்னர் நானக்கை அழைத்தார். நானக்தானே தானியக் காப்பாளர்! நல்ல மனிதரான அந்த கவர்னர், பசியால் வாடும் மக்களுக்கு குறைந்த விலைக்கு தானியங்கள் தருமாறு உத்தரவிட்டார். மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்பதில் நானக்கிற்கு பெரும் மகிழ்ச்சி. கவர்னரின் ஆணைப்படியே குறைந்த விலையில் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கலானார். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை வாங்கிச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அடிக்கடி அவர் தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலைக்குச் சென்றுவிடுவதை மக்கள் கண்டுகொண்டார்கள். பிறகென்ன? காசு கொடுத்து வாங்கியவர்கள் சிலர்; காசு கொடுக்காமல் அள்ளிச் சென்றவர்கள் பலர் மிகச் சீக்கிரமே தானியங்கள் பெருமளவில் காலி! தானியம் குறைந்த விலைக்குத்தான் விற்கப்பட்டது என்றாலும், அதற்கான தொகை கஜானவில் சேர வேண்டும் அல்லவா? கஜானாவும் ஏறக்குறைய காலியாகவே இருந்தது. கவர்னருக்குத் தகவல் போயிற்று. நானக் விசாரிக்கப்பட்டார்.
நீ தானியங்களைக் குறைந்த விலைக்குக் கொடுத்தாயா? இல்லை இலவசமாகக் கொடுத்தாயா? என்று கேட்டார் கவர்னர். இறைவன் சித்தப்படிக் கொடுத்தேன்! என்று வித்தியாசமாக பதில் சொன்னார் நானக். கஜானவில் உள்ள நாணயங்களையும் தானியம் எவ்வளவு மீதி இருக்கிறது என்பதையும் கணக்கிடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார் கவர்னர். என்ன விந்தை! கஜானா முழுவதும் பணத்தால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. அதேபோல் தானியக் கிடங்கும் ஒருசிறிதும் தானியம் குறையாமல் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கவர்னருக்கு நானக் ஒரு மகான் என்ற உண்மை புலப்பட்டது. நானக்கின் பாதங்களில் விழுந்து பணிந்தார். அவர் கவர்னரைத் தூக்கி நிறுத்தினார் நானக். இறைவன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்ய வல்லவன், அன்பரே நான் இந்தப் பணிக்காகப் பிறக்கவில்லை மக்களுக்கு தானியங்களை விலைக்குக் கொடுப்பதில்லை. என் வாழ்வின் நோக்கம் இறையருளை மக்களுக்கு வாரி வாரி வழங்கவேண்டும்; அதுவே என் நோக்கம். என் வாழ்க்கையை முழுவதும் இறைச் சிந்தனைக்காக அர்ப்பணிக்க வேண்டும் எனவே இந்தப் பணியிலிருந்து விடைபெறுகிறேன்!
நேரே வீடு சென்ற அவர் இறைவன் தம்மை இறைப்பணிக்காக அழைப்பதாகக் கூறி இல்லறத்தைத் துறப்பதாகவும் அறிவித்தார். மனைவி இனி தன்னையும் குழந்தைகளையும் யார் காப்பாற்றுவார்கள் என்று கதறினாள். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வாழ வழிசெய்யும் இறைவன் அவர்களைக் கட்டாயம் காப்பாற்றுவான் என்று சொன்ன நானக் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். மரத்தடியில் தன்னந்தனியே அமர்ந்து தியானத்திலும் தவத்திலும் ஆழத் தொடங்கினார். அவர் பெருமை உணர்ந்த பலர் அவரை வந்து பணிந்து வணங்கிச் சென்றார்கள் தங்களுக்கு குருவாய் இருந்து அருளுரைகள் வழங்கும் அவரை அவர்கள் குருநானக் என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஸாரங்கி என்னும் இசைக்கருவியை இசைப்பதில் வல்லவனான மர்தானா என்பவன், அவர்பால் கவரப்பட்டு அவர் அருளுரைகளைப் பருகியவாறே அவருடனே சீடனாய்த் தங்கலானான். குருநானக் அவனை அடிக்கடி ஸாரங்கி வாசிக்கச் சொல்லி, அந்த இசையில் தோய்ந்து இறையனுபவத்தை அந்த இசை மூலம் அடையலானார். ஸாரங்கி இசையைக் கேட்டால் அவர் மனம் ஒருகணத்தில் ஒருமைப்படத் தொடங்கியது. குருநானக் துறவிகளுக்குரிய நெறிப்படி வாழலானார். எனவே பல நாட்கள் ஒரே இடத்தில் தங்குவதைத் தவித்தார். ஊர் ஊராகச் செல்லலானார். ஒருமுறை அவர் மனம் நீடித்த இறையனுபவத்தில் தோய விழைந்தது. மர்தானா தன் ஸாரங்கியை இசைத்தால் விரைவில் மனம் ஒருநிலைப்படுமே?
அன்பனே மர்தானா! ஸாரங்கியை இசைப் பாயாக என்று கேட்டுக்கொண்டார் குருநானக் மர்தானா பெரிதும் மனம் வருந்தினான். குருகேட்கும் இந்த நாள் பார்த்து ஸாரங்கியை அவன் கையோடு எடுத்துவரவில்லையே? குருதேவா என் இசைக்கருவி இன்று என்னிடம் இல்லையே? என்ன செய்வேன் நான்? வடதிசை நோக்கிச் செல் அன்பனே! உனக்கு ஸாரங்கி கிட்டாவிட்டாலும் ரூபாய் என்ற புதிய இசைக்கருவி கிட்டும்! குருவின் வார்த்தையில் சீடன் மர்தானாவுக்கு அபார நம்பிக்கை. வடதிசை நோக்கிச் சிறிது தூரம்தான் நடந்திருப்பான் மர்தானா. எதிரே வந்தார் அருளே வடிவமான ஒரு முதியவர். அவர் முகம் நிலவைப் பிசைந்து செய்ததுபோல் அவ்வளவு குளுமையாக ஒளியுடன் இருந்தது. மர்தானா! நானக்தானே உன்னை அனுப்பினார்? இந்தா ரூபாய் என்று புதிய இசைக்கருவியை அவனிடம் கொடுத்தார் அவர்! மறுகணம் முதியவரைக் காணோம்! காற்றில் கலந்து கரைந்துவிட்டார்! இறைவன் தந்த இசைக்கருவியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு குருநானக்கிடம் மறுபடி வந்தான் மர்தானா. பக்தப் பெருக்கில் பரவசத்தோடு நின்றான். நான் இறைச்சிந்தையில் தோய வேண்டும் அப்பா.
உன் கையில் இருக்கும் அந்த ரூபாய் கருவி மூலம் இசை வழங்கு. குருபக்தியைத் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவியான மர்தானாவின் உள்ளம் துயரில் ஆழ்ந்தது. இறைவன் என்ன இப்படிச் செய்து விட்டார்? தனக்கு ஸாரங்கிதானே வாசிக்கத் தெரியும்? இந்த கருவி வாசிக்கத் தெரியாதே? குருநாதா! இதை வாசிக்க நான் பயிற்சி பெறவில்லையே? சீடனின் கழிவிரக்கத்தைப் பார்த்த குருநானக் அமைதியோடு அருள்பொங்கச் சொன்னார். அன்பனே! நீ இந்த இசைக்கருவியில் பயிற்சி பெற்றாயா இல்லையா என்று நான் கேட்க வில்லையே அப்பா! வாசி என்று மட்டும்தானே சொன்னேன்? சீடனுக்கு ஏதோ புரிந்தது; புரியாதுபோலும் இருந்தது குருவின் கட்டளைக்குப் பணிவோம் என மர்தானா அந்த இசைக்கருவியில் தன் விரல்களை வைத்து மெல்ல மீட்டலானான் என்ன அதிசயம் இது; விரல்கள் தாமாக இயங்குகின்றனவே? தெய்வீக இசை காற்றில் பொங்கியது மர்தானாவின் மனம் வியப்பில் ஆழ்ந்தது. பின்னர் குருநானக் தன் சீடனிடம் விளக்கினார். நம் உடலே ஓர் இசைக்கருவி அப்பா, இதில் ஆன்ம கீதம் மறைந்திருக்கிறது. இறைவனின் அருள்விரல்கள் நம் மனதைத் தீண்டும்போது இறையனுபவம் என்ற இன்னிசை இந்த உடல் கருவியில் பொங்குகிறது! இந்தச் செய்திகளெல்லாம் மக்களிடையே மெல்ல மெல்லப் பரவத் தொடங்கின. இந்து என்றோ முகமதியர் என்றோ அவர் வேறுபாடு பார்க்கவில்லை எல்லாருக்கும் அருளாசி வழங்கினார். எனவே இருதரப்பு மக்களும் அவரை நாடி வந்தார்கள். ஜாதி, மதம் பேதங்களை விட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே அவர் வலியுறுத்தினார்.
அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்ற போது, அந்த ஊர் கவர்னரான மாக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். மாபெரும் செல்வந்தனான அவன் ஒரு முஸ்லிம். நானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். தன்னை முஸ்லிம் என்பதால் ஒதுக்குவதாக எண்ணிய அவன், இந்துக்களைக் கொண்டு தனி அறையில் சமையல் செய்யச் சொல்லி, தனிச் சமையல் என்று விவரத்தை நானக்கிடம் கூறி மறுபடியும் அவரை விருந்துக்கு அழைத்தான். அப்போதும் நானக் அந்த விருந்தை ஏற்கவில்லை. ஏழைத் தச்சன் வீட்டிலேயே தச்சன் தந்த எளிய ரொட்டியையே உண்டுவந்தார். செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை? தான் ஒரு முஸ்லிம் என்பதால்தானே? நேரில் வந்து சீறினான் அவன். மக்கள் கவர்னரின் சீற்றத்தை குருநானக் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீ முஸ்லிம் என்பதால் நான் உன் வீட்டுக்கு வராமல் இல்லை. நான் இந்து, முஸ்லிம் பேதத்தைப் பார்ப்பதில்லை என்பதை மக்கள் அறிவார்கள். இருவரும் இறைவன் பிள்ளைகளே. ஆனால் உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்! என்றார் குருநானக், ரெட்டித் துண்டு கொண்டுவரப்பட்டது. அந்த ரொட்டித் துண்டை கையில் எடுத்துப் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிருந்து செக்கச்செவேலென ரத்தம் வழிந்தது. நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம்தான் இது! என்றார் நானக். பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது. கவர்னர் மாக்பாகோ திகைப்படைந்தான். தன் இல்ல ரொட்டியிலிருந்து வழிந்த ரத்தம் அவன் மனதை மாற்றியது. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான். அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்தான். அது மட்டுமல்ல; அவரது மகிமையை நேரில் கண்டு உணர்ந்ததால் அவரின் அடியவனானான்.
திடீரென்று ஒருநாள் தன் சொந்த ஊரான தால்வண்டிக்குப் போகவேண்டும் என்று சீடர்களிடம் சொன்னார் குருநானக். அவர் ஏன் சொந்த ஊருக்கு அவசரமாகப் போக விரும்புகிறார் என்று சீடர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னால் அதில் ஏதாவது காரணம் இருக்கும் என்பதை சீடர்கள் உணர்ந்தே இருந்தார்கள். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அவரோடு சொந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் சீடர்களுக்குப் புரிந்தது - அங்கே அவரின் நெருங்கிய அடியவரான ராய்புலார் மரணப் படுக்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது. ராய்புலார் முற்றிலும் வித்தியாசமான அடியவர். இளம் வயதில் குருநானக்கின் பள்ளித் தோழராக இருந்தவர். குருநானக்கைவிட சில ஆண்டுகள் வயதில் மூத்தவர். அப்போதே நானக்கின் மகிமைகளை உணர்ந்து, சக தோழரான அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டவர். குருவின் பார்வையும் சீடரின் பார்வையும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. ராய் புலாருக்கு பேச வார்த்தை வரவில்லை. பக்திப் பரவசம் குரலைக் கட்டியது. விழிகளில் கண்ணீர் அரும்பியது. குருநாதரின் கண்கள் தம்மைவிட வயதில் மூத்த தன் சீடரின் கண்களோடு கலந்தன. எத்தனையோ ஆன்மிக விஷயங்களைப் பேசாமல் பேசி அவரை ஆறுதல்படுத்தின. நானக்கின் கண்கள், மரணத்தைக் கண்டு அஞ்சாதே என்ற செய்தியை அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். குருநானக்கின் கண்களில் இந்தச் செய்தியைப் படித்த ராய்புலார், கை கூப்பியவாறே ஆனந்தமாக மரணத்தைத் தழுவினார். மயானம் வரை சென்று, இறுதிச் சடங்குகள் முடியும் வரையும் அங்கேயே இருந்தார் நானக். மனித உறவுகளை மதிக்க வேண்டும்; அன்பை மதிக்க வேண்டும் என்பன போன்ற தத்துவங்களை சீடர்களுக்குத் தம் செயலால் உணர்த்தினார். ராய்புலார் இறக்கப் போகிறார் என்ற செய்தி எங்கோ இருந்த நானக்கிற்கு எப்படி முன்கூட்டியே தானாகத் தெரிந்தது? ஒருவேளை ராய்புலாரின் வலிமையான பக்தி காற்றுவெளியில் அந்தச் செய்தியை ஒரு தந்திபோல் கொண்டு வந்து நானக்கின் மனத்திற்குத் தெரிவித்ததோ? அந்த ரகசியமெல்லாம் யாருக்குத் தெரியும்? வரலாறு நடந்த உண்மைச் சம்பவத்தை மட்டுமே பதிவு செய்கிறது. அது எப்படி நடந்தது என்ற சூட்சுமம் நடக்கும்போதும் சரி; நடந்த பின்னும் சரி யாரும் அறிவதில்லை. தன் சொந்த ஊர் வந்ததை ஒட்டி நானக் தம் பெற்றோரையும் சென்று சந்தித்தார். இளமையில் தங்கள் பிள்ளையின் ஆன்மிக நாட்டங்களை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த உடலைத் தந்தவர்கள் அவர்களே அல்லவா? உடல் இருக்கும் வரை அவர்களுக்கு நன்றி பாராட்டுவதுதானே நியாயம்? தாய் - தந்தையை வணங்கி தமது பக்தியை அவர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டார் நானக். பெற்றோர் பாசத்தால் நெகிழ்ந்தார்கள். தங்கள் பிள்ளையின் பெருமையைத் தாங்கள்தான் அவனது இளமைக் காலத்தில் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
தம் மனைவியையும் குழந்தைகளையும்கூடச் சந்தித்தார் நானக். தான் இல்லற வாழ்வில் ஈடுபட்டது இறைவனின் கட்டளைப்படியே என்றும்; யார் மீதும் தனக்கு எந்த விரோதமும் இல்லை என்றும் கூறினார். இல்லறமும் துறவறமும் சம அளவு மதிப்புடைய இணையான இருவகைப்பட்ட நெறிகள் தான் என்றும்; ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததும் அல்ல- தாழ்ந்ததும் அல்ல என்றும் கூறினார். மறுபடியும் இறைவனின் கட்டளை கிடைத்தால் தாம் அவர்களைத் தமது இருப்பிடத்திற்கு அழைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறிய மனைவி நெகிழ்ச்சியுடன் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினாள். பொதுவாக மணவாழ்வைத் துறந்து துறவியாகும் சித்தர்கள், பின்னர் மீண்டும் வந்து தங்கள் மனைவியையோ குடும்பத்தாரையோ சந்திப்பதில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாத உண்மைத் துறவியான குருநானக் மீண்டும் தம் மனைவியைச் சென்று சந்திப்பதில் தயக்கம் காட்டவில்லை. மனைவியும் கூட அவரது உண்மைத் துறவைப் புரிந்துகொள்ள அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்சாபில் வற்றாமல் ஓடும் ஒரு ஜீவநதி ராவி. அதன் இருபுறமும் இயற்கை அன்னை மரங்களாகவும் செடி, கொடிகளாகவும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தாள். ஒருமுறை அந்த நதிக்கரையில் அடியவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்த நானக். அபரிமிதமான அந்த இயற்கை அழகில் மனம் தோய்ந்தார். தியானம் செய்ய ஏற்ற இடமானதால், இங்கேயே ஒரு குடிசை போட்டுத் தங்குவோம் என்றார். ராமனுக்கு லட்சுமணன் வனவாசத்தில் குடில் அமைத்துத் தந்ததுபோல், சீடர்கள் தங்கள் குருவுக்குக் குடில் கட்டித் தந்தார்கள். குருநானக் அந்தக் குடில் இசையும் பிரார்த்தனையுமாக வாழத் தொடங்கினார். நதியில் குளியல்; எளிய உணவு; நாளெல்லாம் இறைச் சிந்தனை; தெய்வீகப் பாடல்கள்; பல நேரம் ஆழ்ந்த தியானத்தால் ஏற்பட்ட சமாதி நிலை இப்படி நடந்தது காலம்.
இந்தச் செய்தி வட்டிக் கடைக்காரனான சேட் கரோரியாவை எட்டியது. அவனுடைய சொந்த இடத்தில் யாரோ ஒரு துறவி குடிசை போட்டுத் தங்குவதாவது? கடும் சீற்றம் கொண்டான் அவன். பெண்ணாசை, பொன்னாசை போல மண்ணாசையும் அற்றவர் அந்தத் துறவி என்பதையோ அந்த இடத்தில் ஏதோ இறை சாந்நித்யம் இருப்பதை உணர்ந்ததால்தான் அவர் அங்கே தங்கியிருக்கிறார் என்பதையோ அவன் உணரவில்லை. ஒரு விரல் அசைத்தால் கோடிக்கணக்கில் பணத்தைக் கொண்டுவந்து கொட்டித் தங்கள் சாம்ராஜ்ஜியத்தையேகூட அவருக்குக் காணிக்கையாக்க பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவன் தெரிந்துகொள்ளவில்லை. இதோ அவரை விரட்டுகிறேன்! என்று குதிரையில் ஏறிப் புறப்பட்டான் அவன். குதிரை குருநானக் ஆசிரமத்தை நெருங்க நெருங்க, அன்றுவரை நன்றாக இருந்த சேட்கரோரியாவின் கண்பார்வை மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. ஆசிரமத்தின் அருகே முற்றிலுமாகப் பார்வை பறிபோயிற்று. உதவியாளர் துணையோடு நானக்கிடம் சென்ற அவன் அவர் பாதங்களில் விழுந்து பணிந்தான். தன்னை மன்னிக்குமாறும், தனக்குப் பார்வையை மீண்டும் அருளுமாறும் வேண்டினான். எல்லா இடமும் இறைவனின் இடம்தானே அப்பா? கடைசியில் நமக்குத் தேவைப்படுவது வெறும் ஆறடி நிலம்தானே? சரியான பார்வையுடன் உலகைக் பார்க்கக் கற்றுக்கொள். கடவுள் உனக்குப் பார்வை தருவார்! என அருள்புரிந்தார் குருநானக். மீண்டும் பார்வை பெற்ற அவன் நிலத்தை அவருக்கே சாசனம் செய்து தந்தான். அவரது அடியவனாகவும் மாறினான். கடவுளின் இருப்பிடம் என்று பொருள்படும் வகையில் அந்த இடத்திற்கு கர்தார்பூர் எனப் பெயர் சூட்டினார் நானக். அங்கே அவரது அடியவர்கள் குருத்வாராவை நிர்மாணித்தார்கள். அந்த இடத்தைச் சுற்றிப் பல குடும்பங்கள் குடியேறின. அவர்களெல்லாம் குருநானக்கின் அடியவர்கள் ஆனார்கள். குருநானக்கைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள் வரலானார்கள். அடியவர்கள் தங்குவதற்காகக் கட்டடங்கள் கட்டப்பட்டன. குருத்வாராவும் அதைச் சுற்றியிருந்த பிரதேசங்களும் இறையன்பர்களின் திருத்தலமாயின. தம் மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் தம்மிடமே அழைத்துக் கொண்டார் நானக். துறவு நெறி இன்னதென்று புலப்படுத்திய குருநானக், இல்லறநெறி இன்னதென்றும் புலப்படுத்த விரும்பியவர் போல் செயல்பட்டார். வயலில் தாமே ஏரோட்டினார். தாமே விதை விதைத்து அறுவடை செய்தார். தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு மட்டுமே தம் குடும்பத்தை நடத்தினார். எஞ்சிய செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டு அருளுரைகளை வழங்கலானார். ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன் அடியவன் போல் வந்தான். நானக்கிடம் ஏராளமான பணம் இருக்கும் என்றும்; அவரைக் கொன்று அந்தச் செல்வத்தை அபகரிக்கலாம் என்றும் திட்டமிட்டான். நானக்கிடம் பணமே இல்லை என்பதை அவன் நம்பத் தயாராயில்லை. கபட வேடதாரியான அவன் நானக்கை தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான்.
ஒரு பார்வையில் உள்ளத்தை ஊடுருவி அனைத்தையும் உணரும் குருநானக் உடனே சம்மதித்தார். தன் அடியவர்களான மர்தானாவோடும் பாலாவோடும் அவன் இல்லத்திற்குச் சென்றார். திருடன் வீட்டு வாயிலில் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார். மர்தானா! உன் இசைக்கருவியான ரூபாப்பை எடுத்து மீட்டு! என்றார். ரூபாயைத் தவிர வேறெதுவும் அறியாத அந்தத் திருடன் அன்று ரூபாய் இசையைக் கேட்கலானான். நானக் மனம் இறையனுபவத்தில் உயரே உயரே பறக்கலாயிற்று. அவரது தேனினுமினிய குரலிலிருந்து பாடல் பிறந்தது. திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளிவிவரத்தோடு விவரிக்கலாயிற்று! முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போக கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடல் விவரித்தபோது, சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.
மகனே பாவ வாழ்வை விட்டுவிட்டுப் புண்ணிய நெறிக்கு வா! என அவன் தலையை வருடி அறிவுரை சொன்னார் நானக். பிரபோ! இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழிசொல்ல வேண்டும்! என்று அவன் கெஞ்சினான். அவன் பாவங்கள் தொலைய குருநானக் ஒரு வழி சொன்னார். குருநானக் சொன்ன அந்த வழி எந்த ஞானியும் சொல்லாத ஒரு விந்தையான வழி. சஜ்ஜன் பெரும் திகைப்பில் ஆழ்ந்தான். பிரபோ! இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்! என்று சஜ்ஜன் கதறி அழலானான். அவனுக்கு குருநானக் சொன்ன வழி, இதுவரை வேறு எந்த ஞானியும் சொல்லாத புதிய வழி, யாரையெல்லாம் கொன்றானோ யாரிடமிருந்தெல்லாம் திருடினானோ அவர்களின் வீட்டுக்கெல்லாம் மறுபடி சஜ்ஜன் போக வேண்டும். குற்றத்தை ஒப்புக்கொண்டு அங்குள்ளவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே நானக் சொன்ன வழி. சஜ்ஜன் தான் திருடிய வீடுகளையும் கொலைசெய்த வீடுகளையும் தேடிக் கண்டு பிடித்தான். அங்குபோய் அவன் கண்ணீர் விட்டு, உண்மையைச் சொன்னபோது அவனை நையப் புடைத்தவர்களும் உண்டு, எட்டி உதைத்தவர்களும் உண்டு. அவன் பதிலுக்குத் தாக்காமல் கண்ணீரோடு அடி வாங்கிக் கொண்ட விதத்தைப் பார்த்து மக்கள் திகைத்தார்கள். தன் பாவ மூட்டை அடித்து அடித்துப் புண்ணிய மூட்டையாக வெளுக்கப்படுவதாக உணர்ந்தான் சஜ்ஜன். மெல்ல மெல்ல ஆசைகளைக் குறைத்துக் கொண்டு ஒரு துறவிபோல் வாழலானான். குருநானக்கின் பெருமை சஜ்ஜனின் செயல் மூலமாக விறுவிறுவென்று பரவலாயிற்று. அப்பழுக்கற்ற ஓர் உண்மையான மகான் தங்களிடையே வாழ்கிறார் என்பதை உணர்ந்து மக்கள் நம்பிக்கை மதிக்கத் தொடங்கினார்கள்.
ஒருமுறை குருநானக் சீடர்களோடு பயணம் செல்லும்போது அவரையும் அவரது அன்பர்களையும் வளைத்துப் பிடித்தார்கள் பாபரது படைவீரர்கள். அவர்களைச் சிறைப் பிடித்து பாபரிடம் அழைத்துச் சென்றார்கள். அப்படி ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டபோது படைத்தலைவன் ஆணைப்படி குருநானக்கின் தலைமீது பெரும் சுமைகள் ஏற்றப்பட்டன. என்ன ஆச்சரியம்! அவர் தலையில் ஏற்றப்பட்ட சுமைகள் அவரது தலைக்கு மேலே அரையடி உயரத்தில் காற்றில் மிதந்தவாறே அவருடன் பறந்து சென்றன! குருநானக் சுமையின் வலி உணராமல் அநாயசமாக நடந்துகொண்டிருந்தார். அந்த அதிசயக் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில படைவீரர்கள் சம்பவம் பற்றி பாபரிடம் சொல்வதற்காக ஓட்டமாய் ஓடினார்கள். பாபரின் அரண்மனை அருகே ஒரு முகாமில் குருநானக் தங்கவைக்கப்பட்டார். அவர் தலைச் சுமை தானாய் அங்கே இறங்கி ஒருமூலையில் போய் உட்கார்ந்து கொண்டது! ஏதேதோ மாயச் சித்து வேலைகளையெல்லாம் கற்று வைத்திருக்கிறாரோ இந்த ஆள் என்று படைத்தலைவன் சீற்றம் கொண்டான். ஏராளமான தானியங்களைக் கொண்டு குவித்து. இவற்றை யெல்லாம் குத்திக் கொடுக்க வேண்டியது உன் வேலைதான்! என்று உறுமினான். குருநானக் தியானத்தில் ஆழ்ந்தார். அடுத்த கணம் தரையில் படுக்கவைக்கப்பட்ட உலக்கை தானே காற்றில் நிமிர்ந்து எழுந்தது! கடகட வென்று தானிங்கள் முழுவதையும் மிக விரைவாக அந்தரத்தில் நின்று குத்தி முடித்தது. பிறகு வேலைசெய்த களைப்புத் தீர தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டது! படைத்தலைவன் வெலவெலத்துப் போனான். தரையில் கிடக்கும் உலக்கை மீண்டும் எழுந்து தன் தலையில் ஒரு போடு போட்டால் தன்நிலை என்ன ஆகும் என்று யோசித்த அவன், இவர் பெரும் மகான் என்பதை உணர்ந்தவனாய் அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தாள். அதற்குள் எல்லா விவரங்களும் பாபருக்கு அறிவிக்கப் பட, பாபரே குருநானக்கை தரிசிக்க விரைந்து வந்தார். அவரை வணங்கிப் பணிந்தார். இந்து-முஸ்லிம் பேதம் பார்க்காதே எல்லாரும் மனிதர்களே அவரவர் வழி அவரவருக்கு நதிகள் பல ஒன்று சேரும் இடம் ஒரே கடல் தான்! இதை உணர்வாய்! என அறிவுறுத்தினார் நானக். பாபர் குருநானக் கூறிய உண்மையை உணர்ந்து கொண்டதாகக் கூறி உடனடியாக எல்லா கைதிகளையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேற்கு பஞ்சாப்பில் ஹஸன் அப்தல் என்ற ஓர் இடம். அங்கே சென்றுகொண்டிருந்தார்கள் நானக்கும் அவரது மர்தானா என்ற சீடனும் மர்தானாவுக்கு அளவற்ற தண்ணீர் தாகம். குருவே தாகத்தால் உடல் தவிக்கிறது. வழியெங்கும் ஒருதுளி தண்ணீர்கூட கிட்டவில்லையே? தாங்கள் அருளக் கூடாதா? என்று மனமுருகிக் கேட்டான் மர்தானா.அருகில் உள்ள குன்றை உற்றுப் பார்த்த நானக், இந்தக் குன்றின்மேல் தண்ணீர் உண்டு போய்ப் பார்! என்றார். மர்தானா நம்பிக்கையுடன் குன்றின்மேல் ஏறினான். அங்கே ஓர் ஊற்று பொங்கிக் கொண்டிருந்தது. குருவே சரணம் என்றவாறே ஊற்று நீரைப் பருக எத்தனித்தான் அவன். மறுகணம் அவனைப் பிடித்து அப்புறம் தள்ளியது ஒரு முரட்டுக் கரம். இந்தப் புனித நீரை நீ குடிக்கலாகாது, விலகிச் செல்! என்று அதட்டியது அது. ஒரு பக்கிரியின் குரல்தான் அது. கையிலெடுத்த நீரை மறுபடி அந்த ஊற்றிலேயே விட்டுவிட்டு அந்த முரட்டுப் பக்கிரியைப் பரிதாபமாகப் பார்த்தான் மர்தானா. தனக்கு கடும்தாகம் என்றும் தன் குருவான நானக் அனுப்பியே தான் வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.
கடகடவென்று நகைத்த பக்கிரி ஊற்று என்னுடையதப்பா! உன் நானக்தான் பெரிய குரு என்கிறாயே அவரிடமே போய் இன்னொரு ஊற்றை உண்டாகச் சொல் என்றான் எகத்தாளமாய். தாகத்தால் துடித்துக் கொண்டிருந்த மர்தானா வேறேதும் வாதிட விரும்பாமல் நேரே நானக்கைத் தேடி குன்றிலிருந்து கீழே இறங்கிவந்தான் நடந்தவற்றையெல்லாம் கூறினான் முறுவல் பூத்தார் நானக். உன் கையால் இங்கேயே கொஞ்சம் தோண்டு! தண்ணீர் கிட்டும்! என்றார் மர்தானா நம்பிக்கையுடன் தோண்டத் தொடங்கினான். ஒரு கைப்பிடி அளவு மண்ணைத் தோண்டுவதற்குள் நீர் ஊற்று பீறிட்டது! தித்திக்கும் அந்தத் தண்ணீரை தாகம் தீரக் குடித்தான் மர்தானா. அவன் குடிக்கக் குடிக்க மேலே குன்றில் பொங்கிக் கொண்டிருந்த ஊற்று நீர் குறையத் தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் குன்றிலிருந்த ஊற்று முற்றிலுமாக வற்றிவிட்டது. குன்றின் மேலிருந்து நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பக்கிரி திகைப்படைந்தான், புதிய ஊற்றில் தண்ணீர் பொங்குவதும் தன் ஊற்று தடைப்படுவதும் அவனை மிரளச் செய்தது. எரிச்சலடைந்த அவன் குருநானக்கைக் கொல்லும் எண்ணத்துடன் மேலிருந்து ஒரு பெரும் பாறையை உருட்டி விட்டான். நானக் சற்றுநேரம் பாறை தன்னை நோக்கி உருண்டு வருவதையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு அதை நோக்கி நில்! என்றவாறு கையை உயர்த்தினார். பாறைக்குக் கூட காது உண்டா என்ன? பாறை அவர் சொன்னபடி அப்படியே நின்றது. அனுப்பியவனை நோக்கிச் செல்! என்றார் நானக். பாறை இப்போது கீழிருந்து குன்றின் மேல் உருண்டு உருண்டு ஏறத் தொடங்கியது. பதறிப் போன, பக்கிரி காப்பாற்றுங்கள் ஐயனே! என்றவாறு நானக்கின் பாதங்களில் சரண்புகுந்தான். மறுபடியும் கையை உயர்த்தினார் நானக். பாறை அவனை விட்டு விலகி தான் முன்னரே இருந்த இடத்தில்போய் உட்கார்ந்து கொண்டது. குருநானக் பக்கிரியை அன்போடு பார்த்தவாறே இயற்கை வளங்கள் எல்லாருக்கும் சொந்தம் அப்பா நமக்கு இறுதியில் சொந்த மாகப் போவது ஆறடி மண்தான்! என்று கூறி வாழ்வின் நிலையாமையை உணர்த்தினார். திருந்திய பக்கிரி அவரது அடியவன் ஆனான். மோசடிகளில் எல்லாம் மிகப்பெரிய மோசடி கடவுள் பெயரால் செய்யப்படும் மோசடி என்ற தீவிரமான கருத்து நானக்கிற்கு உண்டு. இறைவன் பெருமை உணர்ந்தவர்கள் அறநெறியில் வாழவேண்டுமே அல்லாது ஏமாற்றிப் பிழைக்கலாகாது என்பதையும் தம் உபதேசங்களில் ஒன்றாகச் செய்துவந்தார் நானக். ஒருமுறை கயிலாயம், மானசரோவர் வழியாக கர்தார்பூர் நகருக்கு வந்தார் குருநானக். அங்கே ஒரு போலிச் சாமியார் ஒரு மேசைமுன் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல நடித்து வந்தார். அடிக்கடி கண்திறந்து மேசைமேல் விழும் நாணயங்களை மட்டும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக் கொள்வார்!
காசைப் பார்க்கும்போது மட்டுமே அவருக்குக் கண்தெரிந்து வந்தது! காசின்மேல் பற்றுள்ளவன் எப்படித் துறவியாக இருக்கமுடியும்? குருநானக் ஒருநாள் மேசையில் காசு சேர்க்கும் போலிச்சாமியார் உள்ள இடத்திற்குப் போனார். அவர் கண்மூடி இருந்த நேரத்தில் மேசையையே அப்புறப்படுத்தி விட்டார். கண்திறந்த போலிச்சாமியார் என் மேசை எங்கே என் காசு எங்கே என்று அலறலானான். புண்ணியம் செய்த மேசை அல்லவா அது! தன்மேல் விழும் காசை உன்னைப்போல் அது லட்சியம் செய்ததே கிடையாது எனவே நீ மேலுலகம் போவதற்குள் காசில் ஆசையில்லாத அந்த மேசை மேலுலகம் போய் விட்டது என்றார் குருநானக். அவன் வெட்கித் தலைகுனிந்தான். ஆன்மிகம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அல்ல. அது ஆண்டவனின் அருள் பெறுவதற்கான மார்க்கம் என அவனுக்கு அறிவுறுத்தினார் அவர். குருநானக்கின் ஆன்மிகம் உலகியல் நெறிப்பட்டது எல்லாரும் அவரவர் கடமையைச் செய்யும்படி அறிவுறுத்துவது. ஒருநாள் அவரது அறவுரைகளைக் கேட்க ஒருவன் வந்தான். அந்நேரத்தில் அவனது நண்பன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான். நான் தங்கள் அறவுரைகளைக் கேட்பது நல்லதா? என் நண்பனுக்குப் பணிவிடை செய்வது நல்லதா? என்று கேட்டான் அவன். நோயுற்றிருக்கும் உன் நண்பனுக்குப் பணி விடை செய் . அதுவே நீ கடவுளுக்குச் செய்யும் பூஜை! என்று அறிவுறுத்தினார் நானக். இயன்றவரை எல்லாருக்கும் நல்லதே செய்யுங்கள் எதிரியைக்கூட மன்னியுங்கள். மனத்தாலும் பிறருக்குக் கெடுதல் நினையாதீர்கள்! அன்பே எல்லா மதங்களையும்விட உயர்வான மதம் என்றெல்லாம் அவர் சொன்ன உயர்ந்த கருத்துகள் மக்களைக் கவர்ந்தன. 1538- ஆம் ஆண்டு குருநானக்கின் பொன்னுடல் மறைந்தது. இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு பிரிவினரின் அன்பையும் ஒருங்கே பெற்ற ஒப்புயர்வற்ற ஞானி அவர் என்பது அவரது அஞ்சலிக்கு வந்த ஆயிரக் கணக்கான இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் தெளிவாயிற்று. தேரே பாபா நானக் என்னும் இடத்தில் உள்ள அவரது சமாதி லட்சக் கணக்கான மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. அந்த சமாதி மத நல்லிணக்கத்தின் பெருமையை இன்றும் உணர்த்தி, அல்லா, ஏசு, ராமன் என்பதெல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களை என்பதே மவுனமாக உபதேசித்துக் கொண்டிருக்கிறது.
..
Comments
Post a Comment