பாஷாணங்கள்

 பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என்ற சொல்லுக்கு கல் என்றே பொருள். அதற்கேற்ப ஏறக்குறைய எல்லா பாஷாணங்களும் உருவத்தில் கற்களை போன்றோ அல்லது மண்ணாங்கட்டியை போன்றோதான் இருக்கும். மேலும் இவை பெரும்பாலும் இயற்கையாக கிடைக்கும் உலோகங்களின் சேர்மங்கள், அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட வைப்பு பாஷாணங்கள்.


பாஷாணங்கள் மொத்தம் அறுபத்து நான்கு. அவற்றுள் இயற்கையாக கிடைப்பவை முப்பத்தி இரண்டு, வைப்பு பாஷாணங்கள் முப்பத்தி இரண்டு. இவை பற்றி போகர் நூல்கள் பாடியுள்ளன.


அதன்படி 1. கறடக பாஷாணம், 2. கோளகம், 3. சூத பாஷாணம் 4. மிருதாரம், 5. கந்தகம், 6. வீரம், 7. வைகிராந்தம் 8. தாலம்பம், 9. அமிர்தம், 10. சிரபந்தம், 11. தொட்டி பாஷாணம், 12. குதிரைப்பல் பாஷாணம், 13. சங்கு பாஷாணம், 14. கௌரிப் பாஷாணம், 15. துத்தம், 16. பலண்டுறுகம், 17. காந்தம், 18. இலிங்கம், 19. சரகாண்டம், 20. தாளகம், 21. சிவப்பு, 22. ஆவுபல், 23. சாலங்கம், 24. கற்பரி, 25. கற்பாடாணம், 26. அஞ்சனம், 27. கச்சாலம், 28. சீதங்கம், 29. சிலாமதம், 30. கார்முகில், 31. அப்பிரகம், 32. வெள்ளை பாஷாணம் ஆகிய முப்பத்தி இரண்டும் இயற்கை பாஷாணங்கள்.


மேலும் 1. புத்தோட்டு தொட்டி, 2. பொற்றொட்டி, 3. செப்புத்தொட்டி, 4. எருமை நாத்தொட்டி, 5. ஏமசிங்கி, 6. இரத்தசிங்கி, 7. மிருதாசிங்கி, 8. சாதிலிங்கம், 9. கருமுகில், 10. தீமுறுகல் பாஷாணம், 11. வெள்ளை, 12. சவ்வீரம், 13. கோழித்தலை கெந்தி, 14. வாணக்கெந்தி, 15. அரிதார வாய்ப்பு, 16. பவளப்புற்று, 17. கோடா சோரி, 18. பஞ்சபட்சி, 19. குங்குமபாஷாணம், 20. இரத்தபாஷாணம், 21. துத்தம், 22. துருசு, 23. இரசிதம், 24. தைலம், 25. சூத பாஷாணம், 26. நீலம், 27. கந்தகம், 28. சோரா பாஷாணம், 29. காகம், 30. இலவணம், 31. நாக பாஷாணம், 32. இந்திர பாஷாணம் ஆகிய முப்பத்தி இரண்டும் வைப்பு முறையில் செயற்கையாக உருவாக்க படுபவை.  


இவற்றுள் வெள்ளை, துத்தம் சூத பாஷாணம் போன்றவை இயற்கையாகவும் கிடைக்கின்றன. செயற்கையாகவும் தயாரிக்கப்படுகின்றன. எனவே அவை இரண்டு வகையிலும் இடம் பெறுகின்றன. இருப்பினும் சிலவகை மருந்து செய்முறைக்கு இயற்கை பாஷாணங்களும், வேறு சிலவகை மருந்து செய்முறைக்கு செயற்கை பாஷாணங்களும் உகந்ததாக இருக்கும்.


இயற்கையாக கிடைக்கும் பாஷாணங்களில் மாசுக்கள் அல்லது குற்றங்கள் அதிகமாக இருக்கும். எனவே அவற்றை உரிய முறைப்படி, சரியான செயநீர் கொண்டு சுத்தி செய்வது மிகவும் அவசியம். 


அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் உள்ளது என்ற கூற்றுப்படி, அண்டத்தில் இருக்கும் பஞ்சபூதங்களின் தன்மை உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள் என அனைத்திலும் இருக்கின்றது. அதன்படியும் பாஷாணங்களை வகுத்து சொல்லலாம்.


தொட்டிபாஷாணம், பவளப்புற்று, கார்முகில், தீமுறுகல் போன்றவை பூமியின் தன்மை கொண்டவை. குதிரைப்பல், கௌரி, சங்கு, வெள்ளை போன்றவை நீரின் தன்மை கொண்டவை. தாளகம், கெந்தி, சிவப்பு, வீரம் போன்றவை நெருப்பின் தன்மை கொண்டவை. துத்தம், சர காண்டம், இரத்தம், இலிங்கம், பஞ்சபட்சி போன்றவை காற்றின் தன்மை கொண்டவை. சூத பாடாணம் மட்டும் ஆகாயத்தின் தன்மை கொண்டது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி