கை வைத்தியம்
-:-கைவைத்தியம்--:-
நன்றி ; சிரகிரி வேலன்.
மறுபடியும் சின்னச் சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே கைவைத்தியம் செய்து கொள்வதைப்பற்றி எழுதுகிறேன். மருத்துவரிடம் செல்லாமல் செலவும் அதிகமில்லாமல் பலனளிக்கும் வைத்திய முறைகள் இவை.
1.சளியினால் தலை கனம் வரும்போது
7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக இழைத்து நெற்றி முழுவதும் பற்று போடவும்.
2. வாய்வு சேர்ந்து விட்டால் ஏப்பமும் அதிகமாக வரும். ஒரு பிடி கொத்தமல்லி விதைகளுடன் அதில் கால் பாகம் சோம்பு சேர்த்து இரண்டையும் பொன் வறுவலாக வறுத்துப் பொடித்து ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்தால் ஏப்பம் நிற்கும்.
3. நாய் கடித்து விட்டால் உடனே சிறிது வேப்பிலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்து கடிவாயில் மஞ்சளுடன் சேர்த்துக் கலந்து தடவி விட்டால் விஷம் ஏறாது.
4. பித்த மயக்கம் உள்ளவர்கள் தினமும் காலை வேப்பங்கொழுந்து சாப்பிட்டு வருவது பலனளிக்கும்.
5. மூச்சுத்திணறலுக்கு முதல் உதவி:
சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 நிமிடங்களுக்குள் முதலுதவி செய்ய வேண்டியது மிக அவசியம். முதுகிலும் தலையிலும் தட்டுவது பயன் தராது. பாதிக்கப்பட்டவரின் பின்புறம் நின்று கொண்டுஅவரது வயிற்றைச் சுற்றி உங்கள் இரு கரங்களையும் கட்டிக்கொள்ளவும். அவரது வயிற்றில் தொப்புளுக்கு மேலே மேல் நோக்கி அழுத்தம் தர வேண்டும். பாதிக்கப்பட்டவரை கொஞ்சம் முன் பக்கமாக குனியச் சொல்லவும். அவருக்கு சுவாசப்பாதையில் அடைப்பு விடுபடும்வரை திரும்பத் திரும்ப அவரது வயிற்றில் அழுத்தம் தரவும்.
6. ரோஜா இதழ்களை அடிக்கடி தின்னும் பழக்கம் உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வருவதில்லை. நிழலில் நன்கு உலர்த்தப்பட்ட ரோஜா இதழ்களை தேநீர் தயாரிப்பது போல கஷாயம் செய்து பாலும் சீனியும் கலந்து குடித்தால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் சரியாகும். 10 ஆரஞ்சுப்பழங்களில் கிடைக்கும் விட்டமின் C சத்து ஒரு ரோஜாப்பூவின் இதழ்களில் கிடைக்கிறது.
7. வெந்தயம் அரை ஸ்பூனை துளி நெய்யில் வறுத்துப்பொடித்து ஒரு தம்ளர் மோரில் கலந்து குடித்தால் உஷ்ண பேதி சரியாகும்.
8. கொய்யாவில் வாழையை விட பொட்டாசியம் அதிகமாயும் ஆரஞ்சை விட விட்டமின் சி அதிகமாயும் இருக்கிறது. சர்க்கரை நோய், இதய பலவீனம், மலச்சிக்கலுக்கு நல்லதொரு பழம்.
9. 1 ஸ்பூன் தனியா, 1 ஸ்பூன் சீரகம் இரண்டையும் பொடித்து 200 மில்லி தண்ணீரில் ஊறப்போடவும்.இரவு முழுவதும் ஊறியதும் காலை எழுந்து குடிக்கவும். இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
10. 200 மி.லி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெனிலா எசென்ஸைக் கலந்து உடம்பில் தடவிக்கொண்டால் கொசுவோ, ஈயோ உங்கள் பக்கம் நெருங்காது.
Comments
Post a Comment