நாட்டு நாவல் பழம்
நாவல் பழ மருத்துவ நன்மைகளை தெரிந்து கொள்வோம்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நாவல் பழம் சீசன். இதர பழ வகைகளில் இருப்பதைவிட மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. உடலுக்கு வலுவையும், எலும்புகளுக்கு சக்தியையும் தரும் கால்சியம் சத்து நாவல் பழத்தில் அதிகம் உள்ளது. சோடியம், தாமிரம், வைட்டமின் பி 1, பி 2, பி 6 போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. ரத்த சோகை இருப்பவர்கள் மருந்துபோல் கருதி இதை சாப்பிட்டு வந்தால், அதில் இருந்து மீண்டுவிடலாம். நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் இருந்து இரும்பு சத்தை பிரித்தெடுக்கும் பணியை அற்புதமாக செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோயாளிகள் நாவல் பழத்தை விரும்பி சாப்பிட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் ஜம்போலினின் என்ற ரசாயனம் காணப்படுகிறது. ஒரு வகை குளுக்கோசைடு ஆன இது, உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்கும் சக்திகொண்டது. இதனால் நாவல் பழம் சாப்பிடுகிறவர்களின் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ‘நாவல் பழத்தை பத்திய மருந்துபோல் ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை யின் அளவு கட்டுக்குள் வந்துவிடும். சர்க்கரை நோய் தொடக்க நோயாளிகளுக்கு இது அதிக பலன்தரும். நாள்பட்ட சர்க்கரை நோயை கொண்டவர்கள் நாவல் பழ விதைகளை காயவைத்து, தூளாக்கி புளித்த மோரில் கலந்து சாப்பிடலாம்’ என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
நாவல் பழத்தில் இருக்கும் குயுமின், சரும சுருக்கத்தை போக்கி இளமையான தோற்றத்தை தரும். உடலில் புதிய செல்களை புதுப்பிக்கும் திறனை நாம் ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ செயல்பாடு என்று கூறுகிறோம். ஆப்பிள், கேரட், மாதுளை போன்றவைகளில் இந்த ஆன்டி ஆக்சிடென்்ட் திறன் இருக்கிறது. அவைகளை விட அதிகமாக நாவல் பழத்தில் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பல்வேறு விதமான தோல் நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, சருமத் திற்கு பளபளப்பையும் தருகிறது. இதற்கு பசியை தூண்டும் சக்தியும் இருக் கிறது. சிலருக்கு எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். அதனால் அதிக அளவு சிறுநீரை வெளிப் படுத்துவார்கள். அப்படிப் பட்டவர்கள் நாவல் பழத்தை சாப்பிடும் பழக்கத்தை ஏற் படுத்திக் கொள்ளவேண்டும்.
நமது தேசத்தில் விளையும் பழங்களுக்கு சில சிறப்புகள் உண்டு. அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அது மனிதர்களுக்கு பலன் தரும். பெரும்பாலும் ஜூலை மாதத்திலும் உஷ்ணத்தின் தாக்கம் இருந்து கொண்டிருக்கும். அதனால் ஏற்படும் உடல் சூட்டை தடுக்கும் விதத்தில் நாவல் பழம் செயல்படும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது.
பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவைகளை இது குணப் படுத்தும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு நாவல் பழமே உடலுக்கு மிகவும் ஏற்றது.
Comments
Post a Comment