சிறுகண்பீளை சிறுநீரக காப்பான்

 சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவது அல்லது முற்றிலும் செயலிழந்து போவது, சிறுநீரகங்கள் வீங்குவது அல்லது சுருங்குவது ஆகியவைதான் இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்னைகள். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வாக இருக்கும், அற்புத மூலிகைதான் சிறு கண் பீளை. ‘பூளைப்பூ, ’பொங்கல் பூ’, ‘சிறு பீளை’ எனவும் இது அழைக்கப்படுகிறது.


மழைக்காலம் முடிந்ததும் பரவலாக அனைத்து இடங்களிலும் இச்செடி முளைத்துக் காணப்படும். இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. மார்கழி மாதத்தில், அதாவது பொங்கல் நெருங்கும் சமயத்தில் இச்செடிகளில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும். இலையைக் கண்ணாகவும், அதையொட்டியுள்ள பூவை கண்ணில் இருந்து பொங்கும் பீளையாகவும் கற்பிதம் செய்தே இதற்குச் ‘சிறுகண் பீளை’ என்று பெயர் வைத்துள்ளனர். பொங்கலுக்கு முதல் நாள், வீட்டு வாசல் நிலையில் சிறு கண் பீளைப் பூங்கொத்தைச் செருகி வைக்கும் பழக்கம் இன்றும் உண்டு.


இச்செடியை ஒத்த இன்னொரு தாவரமும் உண்டு, அது பாடாண பேதி. சிறுகண் பீளையைப் போலவே கொஞ்சம் பெரிய இலைகளையும், பெரிய பூவையும் கொண்டிருக்கும் மற்றொரு தாவரம் ‘பெருங்கண் பீளை’. இவற்றுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால்… இவை மூன்றுக்குமே சிறுநீரக நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மை உண்டு. கல் கரைத்தல் மற்றும் நீர் பெருக்குதல் ஆகியவற்றுக்காக இம்மூன்று செடிகளையும் நமது தமிழ் சித்த மருத்துவத்தில் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். இம்மூன்று செடிகளையுமே பொதுவாக, பீளைப்பூ என ஒரே பெயரில்தான் அழைக்கிறார்கள்.


இம்மூன்று மூலிகைகளின் வேர்களுக்கும் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் தன்மை உள்ளது. பூ, தண்டு, இலை ஆகியவை சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இம்மூலிகைகளைச் சமூலமாக வழங்கினால், கற்களைக் கரைப்பதோடு, சிறுநீரைப் பெருக்கி கற்களை வெளிப்படுத்துகின்றன.


சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து… சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்… கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு… கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.


சிறுபீனை குடிநீர்


சிறுபீளை சமூலம் (ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு…ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.


அதோடு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை கொதிக்க வைத்து ஆறிய சீரகத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். இப்படி 5 முதல் 10 நாட்கள் வரை குடித்தாலே அனைத்து விதமான சிறுநீரகக் கற்களும் கரைந்து வெளியேறிவிடும்.


சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதால் சிறுநீரகத்தில் ஏற்படும் ‘ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்’ எனப்படும் சிறுநீரக வீக்கமும், கற்கள் அழுத்துவதால் ஏற்படும் வலியும், இக்குடிநீரால் மிக விரைவாகக் குணமாகிறது. அதிகமான கல்லடைப்பு வயிற்று வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குக் கூட இக்குடிநீர் குடித்த 2 மணி நேரத்தில் வலி குறைந்துவிடும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி