பிரண்டை

 வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!


சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.


இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.


அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.


எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.


மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.


எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.


துவையல்

பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.


இலைத் துவையல்

பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.

இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.


வற்றல்

நன்கு முற்றிய  இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.


பிரண்டை உப்பு

பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.


பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.


2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.


வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி