வெட்டிவேர்

 கோடைக்கால நோய்களை விரட்டும் வெட்டிவேரின் அற்புதம்!


‘பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு... வேருக்கு வாசம் வந்ததுண்டோ… மானே, வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்...' இப்படியொரு திரைப்படப் பாடல் வரி நம் செவிகளில் விழுந்திருக்கும். நாம் அதைக் கடந்து சென்றிருப்போம். வெட்டிவேர் மருத்துவக்குணம் உள்ள ஒரு மூலிகை என்பதோடு அதன் நறுமணத்துக்காகப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வது வழக்கத்தில் இருந்திருக்கிறது. இதனால்தானோ என்னவோ பெண்களின் கூந்தலுக்கு வாசம் உண்டா? இல்லையா? என்று விவாதம் நடத்தும் அளவுக்குப் போயிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மலர்கள் மற்றும் இதுபோன்ற நறுமணம் வீசும் இயற்கைப் பொருட்களைச் சூடிக்கொள்வதால்தான் பெண்களின் கூந்தலில் நறுமணம் வீசும் உண்மை தெளிவாகிறது.


வெட்டிவேருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. இது பல வழிகளில் மனிதர்களுக்குப் பயன்பட்டு வருகிறது. வெட்டிவேர் (Chrysopogon zizanioides)... புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். குருவேர், உசிர், வீராணம் என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வெட்டிவேர் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. உயரமான தண்டையும் நீண்ட தாள்களையும் கொண்டுள்ளது. இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டில் இருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது. விலாமிச்சை வேர் என்று அறியப்படும் வெட்டிவேர் பாதுகாக்கப்பட வேண்டிய அபூர்வமான தாவரமாகும்.


இது அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடியது. மணற்பாங்கான இடங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல வளரக்கூடியது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாகக் காணப்படும். இதன் வேரை வெட்டி எடுத்ததும் புல்லையும் வேரையும் வெட்டி அதன் நடுவே உள்ள துண்டுப்பகுதியை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் இது வெட்டி வேர் என்ற பெயரைப்பெற்றது.


இதன் வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். வேர்க்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பூ, ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும். இது லெமன்கிராஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர், மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும். மேலும் பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது.


வெட்டிவேர் குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் வீசி உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியது.


இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. இதனை மணமூட்டுவதற்காகத் தைலங்கள், குளியல் சோப்புகளில் பயன்படுத்துகிறார்கள்.


வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.


இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.


நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் புத்துணர்வை உண்டாக்கும்.


வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடி செய்து 200 மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு, அந்த நீரை 30 மில்லி முதல் 65 மில்லி வீதம் குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.


நம் முன்னோர் வெட்டிவேரைச் சேர்த்து ஊற வைத்த பானைத் தண்ணீரை அருந்தி வெயிலின் வெம்மையை விரட்டினார்கள். ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் எந்தவித பக்க விளைவுகளையும் இந்தச்சில்லென்ற பானைத் தண்ணீர் ஏற்படுத்தாது. வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறப்படுகிறது.


வெட்டிவேர் இரண்டு கைப்பிடி எடுத்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு நன்றாகக் காய்ச்சிய சுடுநீர் சேர்த்து ஒருநாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். பிறகு சப்ஜா விதையைச் (திருநீற்றுப்பச்சிலை விதை) சேர்த்து குடித்து வர, வெயில் காலத்தில் சூட்டினால் உண்டாகும் தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்புளங்கள், சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் இறங்குதல் போன்ற உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.


முகப்பருக்களுக்கும் வெட்டிவேர் நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெட்டிவேர் ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒரு டீஸ்பூன் சேர்த்து முந்தின நாள் இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் காலையில் அதை அம்மியில் மையாக அரைத்துப் பருக்களின்மீது தடவி வர வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இதன் சிறப்பு!


வெட்டி வேரில் செய்யப்படும் விசிறியால் வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம் நீங்கும். வெட்டிவேரில் செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வைத்தால் கோடைக் காலங்களில் அறையின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சி தருவதோடு புத்துணர்வும் கிடைக்கும்.


மருத்துவக்குணம் கொண்ட வெட்டிவேரில் பலவிதமான பாய், பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதி, படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. வெட்டிவேரில் தயாரான தொப்பியை நறுமணத்துக்காகத் தலையில் அணிந்து கொள்ளலாம்.


நன்றி ... > வாழ்க வளமுடன் ... %

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி